உக்ரைன் கடலில் ரஷிய ஏவுகணை வீச்சு... 4 இந்திய மாலுமிகள் பரிதாபப் பலி... மத்திய அரசு சம்மன்!
உக்ரைன் மற்றும் ரஷியா நாடுகளுக்கு இடையே கடுமையான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து கினியா பிசாவ் நாட்டு கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலில் கப்பலில் பயணித்த 4 இந்திய மாலுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்திய மாலுமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுப் போராடி வருகிறார்.
சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்த எதிர்பாராத தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் பயணித்த அப்பாவி இந்திய மாலுமிகள் பலியான இச்சம்பவத்திற்கு இந்திய மத்திய அரசு தனது பலமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ரஷிய தூதரக உயர் அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது. தாக்குதல் குறித்து நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ரஷியத் தூதருக்கு மத்திய அரசு கண்டிப்பான முறையில் உத்தரவிட்டுள்ளது.
போர் மண்டலப் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பலியான இந்திய மாலுமிகளின் உடல்களை உடனடியாக தாயகம் கொண்டு வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்த மாலுமிக்குத் தேவையான உயர்தர மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தியத் தூதரகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.