ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய தாக்குதல்; 12 மாகாணங்களை குறிவைத்து 660 ட்ரோன்கள் ஏவி அதிரடி - 1,583 நாட்களைத் தாண்டிய போர்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்று 1,583-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யப் பரப்பிற்குள் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் 12 முக்கிய மாகாணங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து மொத்தம் 660 தற்கொலைப்படை ட்ரோன்கள் ஏவப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிய இப்போரில், உக்ரைன் தரப்பிலிருந்து ரஷ்யா நோக்கி நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.ரஷ்யாவின் எல்லைப் பகுதிகள் மட்டுமன்றி, உள்நாட்டுப் பகுதிகளான துலா, மாஸ்கோ மாகாணம் மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பம் உள்ளிட்ட 12 மாகாணங்களை இலக்காகக் கொண்டு உக்ரைன் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
உக்ரைனால் ஏவப்பட்ட 660 ட்ரோன்களையும் தங்களது அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் ஜாமர்கள் மூலம் இடைமறித்து முழுமையாகச் சுட்டு வீழ்த்தி விட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரும் நோக்கில் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
பொருளாதார மையங்கள் இலக்கு: மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் இந்தத் தாக்குதலால் தலைநகரில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை எனக் கூறினாலும், துலா மாகாணத்தில் உள்ள நைட்ரஜன் உரம் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கும் 'அசோட்' ரசாயன ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் ட்ரோன் பாகங்கள் விழுந்து கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகச் சுயாதீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ந்து அதிநவீன ஆயுதங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வழங்கி வருகின்றன. உக்ரைனின் இந்தத் திடீர் அதிரடித் தாக்குதலால் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், எல்லையோரப் பகுதிகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.