ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - விமான நிலையங்கள் முடக்கம்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பலமடங்கு தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் குறிவைத்து உக்ரைன் இராணுவம் இன்று அதிகாலை வரலாற்றிலேயே இல்லாத அளவிலான பிரம்மாண்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே வாரத்தில் இந்த ஆலையின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலால் தலைநகர் மாஸ்கோவின் வான்பரப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் நிலைகுலைந்துள்ளன.
மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 'காஸ்ப்ரோம் நெப்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மாஸ்கோ பிராந்தியத்தின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை விநியோகம் செய்யும் மிக முக்கிய மையமாகும்.
#WATCH | ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன். நகரத்தை சூழ்ந்த கரும்புகை#russia #ukraine #droneattck #moscow #News18TamilNadu pic.twitter.com/r5cneHe08y
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 18, 2026
இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் உக்ரைன் தரப்பில் இருந்து நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மாஸ்கோவை நோக்கிக் ஏவப்பட்டன. இதில் பல ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ட்ரோன்கள் ஆலை வளாகத்திற்குள் புகுந்து வெடித்தன. இதனால் ஆலையின் முதன்மைப் பதப்படுத்துதல் பிரிவு தீப்பற்றி எரிந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்த வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல் காரணமாக மாஸ்கோவின் பரபரப்பான 'ஷெரெமெட்டியேவோ' சர்வதேச விமான நிலையம் உடனடியாகப் பயணிகளை வெளியேற்றி, விமானச் சேவைகளை நிறுத்தியது. மேலும் டொமோடெடோவோ, வ்னுகோவோ உள்ளிட்ட மாஸ்கோவின் அனைத்து முதன்மை விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு, 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாஸ்கோவை நோக்கி வந்த சுமார் 180 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் ஒரே இரவில் 555 உக்ரைனிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட தாக்குதலுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்குத் தீனி போடும் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக எங்கள் வீரர்கள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், எங்கள் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்கு அளிக்கப்பட்ட முற்றிலும் நியாயமான பதிலடி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் புதிய ராணுவத் தொழில்நுட்பத் திட்டம் குறித்து முக்கியப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்:
"வெளிநாட்டு ஆயுதங்களுக்கான தேவையை முழுமையாகக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த 2026 ஆம் ஆண்டிற்குள் உக்ரைனில் மட்டும் சுமார் 10 மில்லியன் (1 கோடி) போர் ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கையை 20 மில்லியனாக (2 கோடி) உயர்த்தவும் எங்கள் பாதுகாப்புத் துறை தயாராக உள்ளது."
கடந்த 2024 இல் 1 மில்லியனாகவும், 2025 இல் 4 மில்லியனாகவும் இருந்த உக்ரைனின் ட்ரோன் உற்பத்தித் திறன், தற்பொழுது அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 10 மில்லியனாக உயரவிருப்பது, நவீனப் போர் உத்திகளில் உக்ரைனின் கை ஓங்குவதைக் காட்டுவதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.