குல்காமில் என்கவுன்டர்… லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை! மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

 

 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதியைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி மிர் பஜார் அருகே உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படையினர் குல்காம் பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இதில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த முகமது லத்தீப் பட் என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மற்றொரு பயங்கரவாதியான உமர் அப்பகுதியில் சிக்கியிருப்பதாகவும், அவரைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நடவடிக்கையில் ராணுவம், ஜம்மு - காஷ்மீர் போலீசாரின் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.