சென்னையில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு... ஆத்திரத்தில் வீதியில் இறங்கி போராடிய மக்கள்!

 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் திடீர் திடீரென ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வரும் நிலையில், நேற்றிரவு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கோடைக் கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவிலும் வெயிலின் உக்கிரம் குறையாமல் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், சென்னை விம்கோ நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட வடசென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது.

நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் சீராகாததால், வீடுகளுக்குள் இருக்க முடியாமல் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

அடிக்கடி ஏற்படும் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொறுமையிழந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நள்ளிரவில் வீதிகளில் திரண்டனர். பின்னர், திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தை (TNEB Office) நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

மின்சார வாரியத்திற்கு எதிராகவும், மின் விநியோகத்தைச் சீரமைக்கக் கோரியும் பொதுமக்கள் அலுவலகத்தின் முன் திரண்டு கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின்வெட்டு சரிசெய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், கோடைக் கால மின் தேவையைச் சமாளிக்கவும், இது போன்ற திடீர் மின்வெட்டுகளைத் தவிர்க்கவும் மின்வாரியம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனச் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.