பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீர் பகிர்வுக்காக 7 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் - துணை ஜனாதிபதி பெருமிதம்!
புதுடெல்லியில் நடைபெற்ற 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நீர் மேலாண்மை மற்றும் பகிர்வுக்காக பல்வேறு மாநிலங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதைப் பாராட்டியுள்ளார்.
புதுடெல்லியில் 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026 நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், நீர் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும், விலைமதிப்பில்லா நீரைப் பாதுகாப்பதில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தான் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் இருந்து வந்தவன் என்றும், ஆயிரம் அடி ஆழத்தில் கூட நீர் கிடைக்காததால் விவசாயம் என்பது கடினமான பணியாக இருந்தது என்றும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். நீருக்காக மூன்றாவது உலகப்போர் ஏற்படக்கூடும் என்று உலக அறிஞர்கள் எச்சரிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீர் பகிர்வுக்காக மொத்தம் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த 2 நாட்களில் இமாசல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட 7 மாநிலங்கள் நீர் பகிர்வுக்காகக் கைகோர்த்து ஒப்பந்தம் செய்துள்ளதை அமைச்சகத்தின் மிகப்பெரிய சாதனையாகக் கருதுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 19 ஆயிரம் கி.மீ. ரதயாத்திரை மேற்கொண்டபோது ஆறுகளை இணைப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை வலியுறுத்தியதை அவர் நினைவுகூர்ந்தார். நீரை நியாயத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும், நீர் மேலாண்மையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமானது என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.