ரூ.2,014 கோடியில் புதிய பசுமை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள டோலூ பகுதியில் ரூ.2,014 கோடி மதிப்பீட்டில் புதிய பசுமை விமான நிலையம் அமைப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் அமைக்கப்பட உள்ள இந்த விமான நிலையம், சுமார் 12,351 சதுர மீட்டர் பரப்பளவிலான நவீன முனையக் கட்டடத்தையும், 2,705 மீட்டர் நீள ஓடுபாதையையும் கொண்டிருக்கும். நெரிசல் மிகுந்த நேரங்களில் 800 பயணிகளையும், ஆண்டுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள சில்சார் விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், புதிய விமான நிலையம் மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பெரும் பயனளிக்கும். சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து இதன் மூலம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.