அமெரிக்காவில் படிக்கும் மத்திய கல்வி அமைச்சரின் மகள் - விமர்சனங்கள் அதிகரிப்பால் இன்ஸ்டாவிலிருந்து வெளியேறினார்!
நீட் மற்றும் போட்டித் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது மகள் நைமிஷா பிரதான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சரின் மகள் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. "இந்தியாவின் கல்வித் துறைக்குத் தலைமை வகிக்கும் அமைச்சரின் மகளே வெளிநாட்டில் சென்று படிப்பது ஏன்? உள்நாட்டு உயர் கல்வி முறையின் மீது நம்பிக்கை இல்லையா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
நைமிஷா பிரதானின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், அவர் படித்த அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் 'அமைச்சர் பதவி விலக வேண்டும்' என்ற கமெண்ட்டுகள் குவியத் தொடங்கின.
தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் 'ட்ரோல்' அச்சுறுத்தல்கள் காரணமாக, நைமிஷா பிரதான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டு சமூக வலைத்தள தளத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும், பொதுப்பொறுப்பில் இல்லாத அவர்களின் குடும்ப உறுப்பினர்களை இணையத்தில் இலக்கு வைப்பது முறையல்ல என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.