இந்தியாவின் முதல் திரவ இயற்கை எரிவாயு ரயில் - மத்திய அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்தார்!

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், இந்தியாவின் முதல் எல்.என்.ஜி. (திரவ இயற்கை எரிவாயு) இரட்டை எரிபொருள் ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.

சபர்மதி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் எரிவாயு மூலம் இயங்கும் நாட்டின் முதல் எல்.என்.ஜி. இரட்டை எரிபொருள் ரயிலை அமித்ஷா நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத்துடன் குஜராத்தில் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் WAG-12 இன்ஜின் பராமரிப்புப் பணிமனை, தானியங்கி சிக்னல் அமைப்பு மற்றும் 'கவச்' ரயில் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட நவீன திட்டங்கள் அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரக்கு போக்குவரத்துக்குத் தனி வழித்தடம், அதிவேக ரயில்கள் மற்றும் நவீன ரயில் நிலையங்களை உருவாக்குவதன் மூலம் இந்திய ரயில்வே துறையைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வருவதாகத் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.