நாடு முழுவதும் மருத்துவர்களுக்குத் தனி அடையாள எண்... புதிய வரைவு விதிகள் வெளியீடு!

 

இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்குத் தனித்துவமான அடையாள எண் வழங்குவதற்காக, 'மருத்துவர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026' வரைவு விதிகளைத் தேசிய மருத்துவ ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மருத்துவர் ஒருவர் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் மூலமாக அவருக்குத் தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும். இந்தத் தனி அடையாள எண் வழங்கப்பட்ட பிறகு, மருத்துவர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ தனித்தனியாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் மருத்துவச் சிகிச்சை அளிக்க இது தகுதி அளிக்கும்.

இந்த அடையாள எண் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் குறியீடு மற்றும் மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவற்றைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதனை மாநிலப் பதிவேட்டிலும் தேசியப் பதிவேட்டிலும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

ஏற்கனவே மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் புதுப்பித்து இந்தத் தனித்துவ அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது.

இந்த வரைவு விதிகள் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் எனத் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.