தீபாவளி கொண்டாட்டத்தில் ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு...  பட்டாசு வெடித்தபோது பெரும் சோகம்! 

 

 

உத்தரப்பிரதேசம்: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர், சகோதரர்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் கோபால்பூர் கடானா கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரப் தோமர். இவர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த சவுரப், கடந்த 8-ம் தேதி இரவு தனது சகோதரர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த தீரஜ் மற்றும் மோனு ஆகிய இருவர், சவுரப் தோமரை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மீரட்டில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் தீரஜ் மற்றும் மோனுவைத் தேடி வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின்போது ராணுவ வீரர் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.