ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… அடுத்த நாளே தாய் உயிரிழப்பு; ஒரு பச்சிளம் குழந்தையும் பலி!

 

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நான்கு குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும் உயிரிழந்தது. மற்ற மூன்று குழந்தைகளும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரௌலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த நவம்பர் 3-ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பதாவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கர்ப்பத்தில் நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது.

இதில் நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது. மற்ற மூன்று குழந்தைகளும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

பிரசவத்துக்குப் பிறகு ஏக்தாவுக்கு ரத்தப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நவம்பர் 4-ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் மூன்று குழந்தைகளும் உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.