பழங்குடிப் பெண்ணுக்கு சாலையோரத்தில் பிரசவம்... மருத்துவமனையில் அனுமதி மறுத்ததால் உறவினர்கள் போராட்டம்... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பணியில் இருந்த டாக்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராணி என்ற பழங்குடியின பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாக கூறி, அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ராணியை அவரது குடும்பத்தினர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட ராணிக்கு மருத்துவமனை வாயில் அருகேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையோரத்திலேயே அவருக்கு பிரசவம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நேரத்தில் பணியில் இருந்த டாக்டர் பங்கஜ் குமார் அஜாக்கிரதையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து டாக்டர் பங்கஜ் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்ணை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு அதன் வாயிலிலேயே பிரசவம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு அவசர காலங்களில் உரிய மருத்துவ உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.