தமிழகத்தில் 2,251 தலைமை ஆசிரியர்களுக்கு அவசர கடிதம்... கட்டாயப் பயிற்சிக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதையும், பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 2,251 அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கட்டாயப் பயிற்சி அளிக்கத் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளின் நிர்வாகத் திறன் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தச் சிறப்புப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12, 2026 முதல் டிசம்பர் 7, 2026 வரை மாவட்ட வாரியாக இந்த ஒரு நாள் கட்டாயப் பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளன. இப்பயிற்சித் திட்டத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.8,66,740 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார். பயிற்சியில் பங்கேற்கும் 2,251 தலைமை ஆசிரியர்களும் பயிற்சி நாளன்று காலை 9:00 மணிக்குள் குறித்த பயிற்சி மையங்களுக்குத் தவறாமல் வருகை தர வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது, பெற்றோர்களின் பங்கேற்பை அதிகரிப்பது மற்றும் பள்ளி வளாகங்களின் உள்கட்டமைப்பைச் சீரமைப்பது குறித்து இப் பயிற்சியில் விரிவாக விளக்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளின் நிர்வாகச் செயல்பாடுகளை நவீனமயமாக்கி, மாணவர்களின் சேர்க்கை மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.