முதல்வர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனை.... அனைத்து தவெக எம்.எல்.ஏ.க்களும் நாளை சென்னை வர தலைமை உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள்ளாகத் தவறாமல் சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளில் சிக்கி வருவது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகத் தலைமை கருதுகிறது.
தொகுதிப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய நபரைக் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட விவகாரம் மற்றும் அதிகாரிகளுடனான உரசல் போன்ற சம்பவங்கள் அரசியல் தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்துக் கட்சித் தலைமை மற்றும் தமிழக முதல்வர் விஜய் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களை நேரில் அழைத்து எச்சரிக்கை அளிக்கவும் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் இந்த அவசரக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சென்னை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எம்.எல்.ஏ.க்கள் செலுத்தும் கவனம், மக்கள் பணிகள் மற்றும் அரசின் திட்டங்கள் சென்றடைவது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படவுள்ளது.
பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் மற்றும் கட்சியின் கண்ணியத்தைக் காப்பது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களைத் தலைவர் விஜய் வழங்கவுள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களுக்குச் சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீஸ் தொடர்பான சட்டப்பூர்வ நகர்வுகள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
அரசின் மீது எவ்வித அவப்பெயரும் ஏற்படாத வகையில் தவெக எம்.எல்.ஏ.க்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகளும் உத்தரவுகளும் இக்கூட்டத்தில் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.