கல்லறை முன் சிரித்த அமைச்சரை எச்சரித்த ராணுவ வீரர்... வைரல் வீடியோ !
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மந்திரி பீட் ஹெக்செத் மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள், ராணுவ நினைவிடத்தில் சிரித்துப் பேசியதாகக் கூறி அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் தேசியக் கல்லறையில், முதலாம் உலகப் போர் உள்ளிட்ட போர்களில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ‘அறியப்படாத வீரரின் கல்லறை’ (Tomb of the Unknown Soldier) அமைந்துள்ளது. அங்கு நவம்பர் 11ஆம் தேதி, வீரர்கள் நினைவு தினத்தையொட்டி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பாதுகாப்புத்துறை மந்திரி பீட் ஹெக்செத், அவரது மனைவி மற்றும் உதவியாளர்கள் நினைவிடத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது குழுவினர் சிரித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கவனித்த அங்கு காவல் பணியில் இருந்த ராணுவ வீரர், “அனைத்து பார்வையாளர்களும் எப்போதும் அமைதியையும் மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று உரக்க எச்சரித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர், நினைவிடத்தில் ஒழுங்கையும் மரியாதையையும் கடைப்பிடிக்குமாறு ராணுவ வீரர் நினைவூட்டியது சரியான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.