அதானி குழும வழக்கு தள்ளுபடி - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த குற்றவியல் பத்திர மோசடி வழக்குகளை நியூயார்க் நீதிமன்ற நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க நீதித் துறை வழங்கிய மனுவை ஏற்றுக் கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ், கவுதம் அதானி மீதான குற்றவியல் பத்திர மோசடி மற்றும் சதி தொடர்பான முக்கியக் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தார். இக்குற்றச்சாட்டுகள் 'நிரந்தரமாக' தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்க அரசு இக்குற்றச்சாட்டுகளை மீண்டும் அதானிக்கு எதிராகத் தாக்கல் செய்ய முடியாது.
வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்ட மீறல்கள் மற்றும் நீதித் தடை தொடர்பான குற்றச்சாட்டுகளில் பிற பிரதிவாதிகள் சார்பான நடைமுறைகளுக்காக நீதிமன்றம் முடிவை ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கு முதன்மையாக வெளிநாடு சார்ந்த விவகாரம் என்பதாலும், அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் பண இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதாலும், வழக்கு விசாரணையைத் தொடரப்போவதில்லை என அமெரிக்க நீதித் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அமெரிக்காவில் $10 பில்லியன் முதலீடு செய்வதாக அதானி குழுமம் கூறியிருந்த வாக்குறுதிக்கும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைச் சரிபார்த்த பின்னரே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தீர்ப்பு குறித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கவுதம் அதானி, "நீதித்துறை செயல்முறையை பணிவுடனும் ஆழ்ந்த மரியாதையுடனும் ஏற்கிறேன். உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கை மீண்டும் வென்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.