ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க போர் விமானத்தால் பரபரப்பு... சி.ஐ.ஏ தலைவர் மாஸ்கோ பயணம்!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த 'சி-17ஏ குளோப் மாஸ்டர்' ராணுவச் சரக்கு விமானம் திடீரென மாஸ்கோவில் உள்ள னுக்கோவோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறப்பு ராணுவ விமானத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் தலைவர் ஜான் ராட்கிளிஃப் மாஸ்கோ சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் ராணுவத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், லாட்வியா நாட்டின் ரிகா நகரில் தங்கி, பின்னர் மாஸ்கோவிற்குச் சென்றடைந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தை முயற்சியில் தேக்கம் நிலவும் சூழலில், ரஷிய உளவுத்துறை அதிகாரிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவே இந்த திடீர் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், 2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ஒருவர் மாஸ்கோவிற்கு நேரடியாகச் சென்றிருப்பது சர்வதேச அளவில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.