அமெரிக்க கிரீன் கார்டு விதிகளில் கடும் கட்டுப்பாடு! வேலைக்கு ஆள் தேர்வு செய்ய 90 நாட்கள் அவகாசம்; இந்தியர்களுக்கு பாதிப்பா?
அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு மூலம் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான (கிரீன் கார்டு) நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அந்நாட்டு தொழிலாளர் துறை முன்மொழிந்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறை தாமதமாகலாம்.
இதன்படி, வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு, தகுதியான அமெரிக்கர்களைத் தேர்வு செய்ய நிறுவனங்கள் குறைந்தது 90 நாட்கள் வேலைவாய்ப்பு விளம்பரம் செய்ய வேண்டும். தற்போதுள்ள விதிகளின்படி இந்தக் காலஅளவு 30 நாட்களாக உள்ளது.
மேலும், நிறுவனங்களின் இணையதளங்கள், வேலைவாய்ப்பு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் வெளியிட வேண்டும். அமெரிக்கப் பணியாளர்களை பணிநீக்கம் செய்த நிறுவனங்கள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதே அல்லது ஒத்த பணிகளுக்கு வெளிநாட்டினரை நியமிக்க கிரீன் கார்டு அனுமதி கோருவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும்.
நர்ஸ்கள், பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விலக்கையும் நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் தற்போது முன்மொழிவாக மட்டுமே உள்ளன; இறுதி விதிகளாக அமலுக்கு வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.