இந்திய சோலார் செல் இறக்குமதிக்கு 126% வரி விதிப்பு - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

 

இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்கள் மற்றும் பேனல்கள் மீதான பொருள் குவிப்புத் தடுப்பு வரம்பு மற்றும் மானியத்தை ஈடுசெய்யும் வரி விகிதங்களை அமெரிக்கா இறுதி செய்துள்ளது.

அமெரிக்க சந்தையில் சோலார் பொருள்களின் இயல்பான மதிப்பை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த இந்திய உற்பத்தியாளர்களுக்கு 123.04 சதவீதம் பொருள் குவிப்புத் தடுப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல இந்தோனேசியாவிற்கு 94.36 சதவீதமும், லாவோஸிற்கு 65.43 சதவீதமும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் தங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெறும் மானியம் காரணமாக அமெரிக்காவில் குறைந்த விலைக்குப் பொருள்கள் விற்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், இந்திய உற்பத்தியாளர்களுக்கு 126.09 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியாவிற்கு 73.2% முதல் 173.7% வரையும், லாவோஸிற்கு 82.03% முதல் 153.67% வரையும் வரி விதிக்கப்படவுள்ளது.

இந்த இறக்குமதிகளால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதியன்று இறுதி முடிவை எடுக்க உள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் இதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.