அமெரிக்கா - ஈரான் அறிவிப்புகளால் கடும் பொருளாதார நெருக்கடி - உலக நாடுகள் கவலை!

 

ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிப்பும், அதற்கு ஈரானின் நேரடிப் போர் எச்சரிக்கையும் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கும் நோக்கில், 'பொருளாதார டி-டே' என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரானின் எஞ்சியுள்ள அனைத்து பொருளாதாரக் கட்டமைப்புகளையும் சர்வதேச அமைப்புகளிலிருந்து துண்டிப்பதே இந்த இறுதிக்கட்ட நடவடிக்கையின் நோக்கம் என அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான அபராதங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலளித்த ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் வளைகுடாப் பகுதிகள் வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரப் போருக்கு ஆதரவு அளிக்கும் அல்லது அதில் பங்கெடுக்கும் எந்தவொரு நாடும், ஈரான் மீது நேரடியாகப் போர் தொடுப்பதற்கு இணையாகக் கருதப்படும் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.

உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேச எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனா போன்ற வல்லரசு நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் சூழலில், அமெரிக்காவின் புதிய தடைகள் சர்வதேச விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு இடையேயான தீவிர மோதல் போக்கு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கிடுகிடுவென உயர்த்தி, உலக அளவில் புதிய பணவீக்கத்தையும் பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கும் எனப் பல்வேறு சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.