ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா... $29 பில்லியன் டாலராக உயர்ந்த போர்ச் செலவு!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையின் போது, அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானம் மற்றும் ட்ரோன்கள் உட்பட மொத்தம் 42 விமானங்கள் சேதமடைந்துள்ளன அல்லது இழக்கப்பட்டுள்ளன என அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றத்தைத் தொடர்ந்து, நடப்பாண்டு பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. சுமார் 40 நாட்கள் நீடித்த இந்த கடுமையான போரின் போது அமெரிக்கா சந்தித்த இழப்புகள் குறித்து, அமெரிக்கப் பாதுகாப்புத்துறை (DoD) மற்றும் மத்திய கட்டளைப் பிரிவு அளித்த தரவுகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்களின் பறக்கும் முறைகள், எரிபொருள் நிரப்பும் கால அட்டவணை மற்றும் மின்னணு சமிக்ஞை தடுப்பு உத்திகளை ஈரான் ராணுவம் உன்னிப்பாகக் கவனித்துத் தனது வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.க்யூ-9 ரீப்பர் (MQ-9 Reaper) உளவு ட்ரோன்கள் 24, கே.சி-135 ஸ்ட்ராடோடேங்கர் (KC-135) எரிபொருள் நிரப்பும் விமானங்கள் 7, எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E) போர் விமானங்கள் 4, எம்.சி-130ஜெ கமாண்டோ (MC-130J) சிறப்பு நடவடிக்கை விமானங்கள் 2, எப்-35ஏ லைட்னிங்-2 (F-35A) அதிநவீன ஸ்டெல்த் போர் விமானம் 1, ஏ-10 தண்டர்போல்ட் (A-10) தாக்குதல் விமானம் 1, இ-3 சென்ட்ரி (E-3 Sentry) வான்வழி எச்சரிக்கை/கண்காணிப்பு விமானம் 1, எச்.எச்-60டபிள்யூ ஜாலி கிரீன் (HH-60W) ஹெலிகாப்டர் 1, எம்.க்யூ-4சி டிரைட்டன் (MQ-4C Triton) அணுசக்தி கண்காணிப்பு ட்ரோன் 1
வழக்கமாக ட்ரோன்கள் மட்டுமே சுடப்படும் நிலையில், போரின் இறுதி வாரத்தில் அமெரிக்காவின் முன்னணி போர் விமானங்கள் ஈரானால் வீழ்த்தப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பேசிய பெண்டகன் கணக்கு அதிகாரி ஜூல்ஸ் டபிள்யூ. ஹர்ஸ்ட், இந்த ஈரான் போருக்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்த செலவு மதிப்பீடு தற்போது 29 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ₹2.4 லட்சம் கோடி) உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில் பெரும் பகுதி இழந்த அதிநவீன தளவாடங்களை மறுசீரமைப்பு செய்வதற்கே செலவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.