அமெரிக்காவில் இன்று இடைக்காலத் தேர்தல்; நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்க வாக்குப்பதிவு!

 

 

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆட்சிக்காலம் பாதியை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், 50 மாகாணங்களில் 36 மாகாணங்களுக்கான கவர்னர் தேர்தலும் நடைபெறுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை, பிரதிநிதிகள் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. செனட் சபையில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தலா 2 உறுப்பினர்கள் என மொத்தம் 100 பேர் உள்ளனர். செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர்; அவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.

அதிபரின் நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நடைபெறுவதால் இந்தத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படுகிறது. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெறும் கட்சிக்கு சட்டமியற்றுதல், அரசு செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்தல், அரசின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் உள்ளிட்டவற்றில் முக்கியப் பங்கு கிடைக்கும். இதனால் தேர்தல் முடிவுகள் டிரம்ப் அரசின் அடுத்தகட்ட செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.