ஈரானின் 2 படகுகளைத் தாக்கி அழித்த அமெரிக்க ராணுவம் - மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா கடல் டிரோனைக் கைப்பற்ற முயன்றதாகக் கூறி ஈரானின் 2 சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா இயக்கி வந்த ஆளில்லா கடல் டிரோனைக் கைப்பற்ற ஈரானியப் படகுகள் முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில் ஈரானின் 2 சிறிய படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், சுமார் 8 மீட்டர் நீளமுடைய 'செயில்டிரோன்' வகையைச் சேர்ந்த இந்தத் தானியங்கி ஆளில்லா கடல் வாகனம் கடல் போக்குவரத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாண கடற்பகுதியில் 2 மீன்பிடி படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் சில மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் ஈரான் அரசு ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்கனவே கடந்த வாரம் அமெரிக்காவின் நீருக்கடியில் இயங்கும் டிரோன் ஒன்றை ஈரான் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.