ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்க ராணுவம்!

 

அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் தொடர்ச்சியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முயன்றதற்குப் பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை, அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைத்து இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. எனினும், அமெரிக்கக் கப்பல்கள் எந்தவித சேதமமின்றித் தப்பியுள்ளன. இதற்கு கடும் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க மத்திய கட்டளைப் படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி ஈரானியக் கப்பல்களை அழித்துள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் இயங்கி வந்த எம்/டி காவிஸ், எம்/டி சார்மினார், எம்/டி ஹொரைசன் 1 மற்றும் எம்/டி ரிஸ்கோ ஆகிய 4 எண்ணெய் கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டன. மேலும், கார்க் தீவு அருகே இருந்த எம்/டி டெரியா என்ற மற்றொரு எண்ணெய் கப்பலும் தாக்கி அழிக்கப்பட்டது.

இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஈரானின் புரட்சிகரக் காவல் படைக்கு நிதியளிக்கும் சட்டவிரோத நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் கப்பல்களில் இருந்த ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.