அமெரிக்காவில் மருத்துவமனையில் கைதி நடத்திய துப்பாக்கிச் சூடு - போலீஸ் அதிகாரி பலி!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கைதி ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதியின் இந்த வெறிச்செயலால் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி வீரமரணமடைந்தார்.
கொள்ளை வழக்கில் தொடர்புடைய கைதி ஒருவரை, மருத்துவப் பரிசோதனைக்காகச் சிகாகோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அந்த கைதி தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த அதிகாரிகள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில், ஜான் பர்த்தலோமிவ் என்ற போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு அதிகாரி படுகாயமடைந்த நிலையில், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, அந்த கைதி மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார். உடனடியாக சிகாகோ நகர போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தப்பியோடிய கைதி மீண்டும் காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
போலீஸ் காவலில் இருந்த ஒரு கைதி, எப்படித் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்தார் என்பது குறித்துப் பாதுகாப்புப் பிரிவினரிடையே பெரிய கேள்வி எழுந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன்பே கைதியைப் போதிய சோதனைகளுக்கு உட்படுத்தினார்களா? அல்லது அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சிகாகோ மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளி மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.