ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

 

ரஷியாவும் உக்ரைனும் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரைவில் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருதரப்புச் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.

ஏராளமான மக்கள் கொல்லப்படுவதால் இரு தரப்பும் இதை விரும்பவில்லை என்றும், இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதினுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப், விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என நம்புவதாகக் கூறினார். மேலும், ஜெலன்ஸ்கியுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும், ஒரு தீர்வைக் காணத் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைன் வீரர்களின் திறமையையும் அவர் பாராட்டினார்.

இந்தச் சந்திப்பின்போது பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்ப் உதவுவார் என்று நம்புவதாகவும், குளிர்காலத்திற்கு முன்பாகவே, முடிந்தவரை விரைவாக போரை முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தூதரக மட்டத்திலான முயற்சிகள் மற்றும் சந்திப்புகள் நடைபெற்று வந்தாலும், ரஷியா - உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதுடன், இரு தரப்பும் தொலைதூரத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.