"ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தூதரகப் பேச்சுவார்த்தைகள் விரைவான பலனைத் தராவிட்டால், ஈரான் மீது மீண்டும் தீவிரமான ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வளைகுடாப் பகுதியில் நிலவும் தீவிரப் பதற்றத்தைத் தணிக்க மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு எதிரான எந்தச் செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய டிரம்ப், "ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளன. ஆனால் அதற்கு அதிக அவகாசம் இல்லை; பேச்சுவார்த்தை விரைந்து முடிய வேண்டும், இல்லையெனில் கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா திரும்பும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹோமுஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலோ அல்லது தடையை ஏற்படுத்தினாலோ, ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் அணு உலை வசதிகள் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது. தொடர் ராணுவ மோதல்கள் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேசப் பொருளாதாரத்திலும் பங்குச் சந்தைகளிலும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீப நாட்களாகத் தற்காலிக அமைதி நிலவி வந்த நிலையில், டிரம்பின் இந்த அறிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் பதற்றத்தை உடனடியாகத் தணிக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.