ஈரானில் அமெரிக்கா நடத்திய கோரத் தாக்குதல்; இதுவரை 3,375 பேர் பலி - ‘அணுசக்தி ஒப்பந்தம்’ மோதலால் ரத்தக் களரியான ஈரான்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போரின் கோர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் நீதித்துறையின் கீழ் இயங்கும் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர் இது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக ஈரானில் இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் 2,875 பேர் ஆண்கள் மற்றும் 496 பேர் பெண்கள் ஆவர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எத்தனை பேர் என்ற விரிவான பட்டியல் இன்னும் முழுமையாகச் சேகரிக்கப்படவில்லை. ஈரான் தனது அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா அந்த நாட்டின் மீது போரைத் தொடங்கியது. ஒரு மாதத்தைக் கடந்தும் போர் நில்லாமல் நீடித்து வருகிறது. முக்கியமாக, ஈரானின் ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகப் போரை நிறுத்த எடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் ஈரானின் பல நகரங்கள் இடிபாடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா தனது பிடிவாதத்தை விடாததாலும், ஈரான் அடிபணிய மறுப்பதாலும் மத்திய கிழக்கில் அமைதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.