ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் - மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழலைத் தணிக்க சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை ஈரான் நாட்டின் எல்லைக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதல்உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியும், பதற்றமும் தொற்றிக் கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய அணுஆயுதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலை நோக்கி ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. மேலும், சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மூடியதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுதத் தயாரிப்பைக் கைவிடுவது மற்றும் படைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பரஸ்பர நிபந்தனைகளுடன் தூதரக அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்த போதிலும், இன்று காலை ஈரானின் முக்கியத் துறைமுக நகரமான பண்டர் அபாஸ் மீது அமெரிக்கா திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஹர்முஸ் ஜலசந்திப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படையின் அதிவேகப் படகுகள் மீதும் அமெரிக்கப் படைகள் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்துப் பென்டகன் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நகர்ந்து வந்த சூழலில், அமெரிக்கா நடத்தியுள்ள இந்த அதிரடித் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் அசைக்க முடியாத விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் துரோகத் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் எந்த மாதிரியான அணுஆயுதப் பதிலடியைக் கொடுக்கப் போகிறது? அல்லது ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் முழுமையாக முடக்கி உலகப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துமா? என்ற அச்சம் சர்வதேச வர்த்தக அமைப்புகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் துணிகர நடவடிக்கையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் தற்போதைய நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.