“ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கும் தடை விதிப்போம்” - அமெரிக்கா எச்சரிக்கை!
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விடுத்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இருப்பதாகத் தான் கருதவில்லை என்று மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட நாடுகள் தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டுள்ளன என்பதையும், ஈரானுடன் பல நாடுகள் பேசுவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி, அந்த நாட்டிற்கு வருவாய் ஈட்ட உதவும் வகையில் எந்த நாடும் புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் செயல்களில் ஈரானுக்கு உதவ முனையும் நாடுகள் மீதும் அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ஈரான் அதிபர் சந்திப்புக்குப் பின் அமெரிக்கா விடுத்துள்ள இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.