அமெரிக்க விசா நேர்காணல் விதிமுறைகளில் மாற்றம் - குழந்தைகளுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

 

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிறுவர்களுக்கான விசா நேர்காணல் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு அமெரிக்க விசா விண்ணப்பிக்கும் போது, நேர்காணலின் போது பெற்றோருடன் குழந்தைகளும் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். இதற்கு முன்பு 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்குப் பெற்றோர்கள் மட்டுமே நேர்காணலுக்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை அமலில் இருந்தது. தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

"விசா ஃப்ரைடே" அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, விசா அதிகாரி ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் நேரில் பார்க்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு விசா பெறத் திட்டமிடும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், நேர்காணல் தேதியின் போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லும் வகையில் முன்கூட்டியே திட்டமிடுமாறு அமெரிக்கத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.