undefined

ஈரான் வான்வெளியை முழுமையாகக் கைப்பற்றுவோம் - அமெரிக்க அறிவிப்பு!

 

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் வான்வெளியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப் போவதாகத் அதிரடியாக அறிவித்துள்ளது. உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் இது குறித்து பேசுகையில், உலகின் இரண்டு மிகப்பெரிய விமானப் படைகளைக் கொண்டுள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் வான்வெளியை முழுமையாகக் கைப்பற்றும். இன்னும் சில நாட்களில் இந்த இலக்கு எட்டப்படும் என்றார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முறையாக, நீருக்கடியில் இருந்து ஏவப்பட்ட 'டொர்பிடோ' வகை ஏவுகணை மூலம் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தகர்த்துள்ளது. சர்வதேச நீர்நிலைகளில் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்துக் கொண்டிருந்த ஈரானுக்கு, அமெரிக்கா "அமைதியான மரணத்தை" பரிசாக வழங்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் இந்த வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்த ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பல துண்டுகளாக உடைத்து மூழ்கடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த மோதலால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்த நேரடி எச்சரிக்கை, ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் பிற நாடுகளையும் போருக்குள் இழுக்க வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.