ஈரான் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

 

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முடக்கும் நோக்கில், ஈரானின் மூத்த தூதர்களைப் படுகொலை செய்ய இஸ்ரேல் அரசு ரகசியமாகத் திட்டமிட்டிருந்ததாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபரீத ஆபத்தை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், பிராந்திய நட்பு நாடுகளின் உதவியுடன் ஈரானை ரகசியமாக எச்சரித்துத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான ‘தி நியூயார்க் டைம்ஸ்’  புலனாய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானின் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப்  ஆகிய இருவருமே இஸ்ரேலின் முதன்மைப் படுகொலை இலக்காக  இருந்துள்ளனர். இந்த இரு தலைவர்களுமே அமெரிக்கா, பாகிஸ்தான், கத்தார் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தோடு நடப்புப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், 'ஹார்முஸ் நீரிணையை' மீண்டும் திறக்கவும் நடத்தப்பட்டு வரும் உயர்நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் முதன்மைப் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஊடகங்கள் இந்த ரகசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு வியப்பூட்டும் நள்ளிரவுச் சம்பவத்தை விவரித்துள்ளன. கடந்த ஏப்ரல் 12 அன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடனான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, சபாநாயகர் கலிபாப் தலைமையிலான 70 பேர் கொண்ட ஈரான் தூதுக்குழுவினர் தனி விமானத்தில் தெஹ்ரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியான ஈராக் வழியாக இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரான் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததை ஈரான் உளவுத்துறை கண்டறிந்தது. கலிபாப்பின் விமானத்தை வான்வழியிலேயே சுட்டுவீழ்த்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா கொடுத்த ரகசிய எச்சரிக்கையை அடுத்து, அந்த விமானம் உடனடியாக எல்லையோர நகரான 'மஷ்ஹாத்' விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் கலிபாப் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து 8 மணி நேரம் சாலை மார்க்கமாகப் பலத்த பாதுகாப்புடன் தெஹ்ரான் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நடப்புப் போரின் தொடக்கத்தில் ஈரானின் தலைவர் உள்ளிட்ட பலரை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் வீழ்த்தியிருந்தாலும், பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு அரசியல் தலைவர்களைக் கொல்லக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. குறிப்பாக மார்ச் மாதத்தில் ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இஸ்ரேலால் கொல்லப்பட்ட போதே அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

பேச்சுவார்த்தை மேசையில் இருக்கும் அரக்ச்சி அல்லது கலிபாப் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கொல்லப்பட்டால், ஒட்டுமொத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளும் முற்றிலுமாக முறிந்து, மீண்டும் ஒரு மிகப்பெரிய நேரடிப் போர் வெடிக்கும் என அமெரிக்கா அஞ்சியது. இதனால், அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நட்பு நாடுகளான கத்தார் மற்றும் பாகிஸ்தான் மூலமாக, "இஸ்ரேல் உங்களைக் குறிவைக்க வாய்ப்புள்ளது, எச்சரிக்கையாக இருக்கவும்" என்று ஈரானுக்குத் தூது அனுப்பியது.

அமெரிக்காவின் இந்த தலையீடு மற்றும் ரகசிய எச்சரிக்கை காரணமாக இஸ்ரேலின் படுகொலைத் திட்டம் முறியடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் இந்த ராஜதந்திர நகர்வைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்ட உடன்படிக்கை கையெழுத்தாகி,  சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.