அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு... கர்ப்பிணிப் பெண் பலி; 6 பேர் காயம்!

 

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் ஃபேர்ஃபீல்டு நகரில் உள்ள சோலானோ டவுன் சென்டர் வணிக வளாகத்தில் செயல்படும் ‘ஸ்பிரிட் ஹாலோவீன்’ கடையில், அக்டோபர் 30-ம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மர்ம நபர் ஒருவர் கடைக்குள் துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் குண்டு காயமடைந்தனர்.

இதில் கான்ஸ்டன்ஸ் ஹேஜஸ் (31) என்ற பெண் உயிரிழந்தார். அவர் கர்ப்பமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 6 பேரில் 16, 19, 32 வயதுடைய மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 வயது நபர் ஆபத்தான நிலையில் இருந்தாலும் சீராக உள்ளார். மற்ற இருவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.

இந்தத் துப்பாக்கிச்சூடு குறிப்பிட்ட ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாகக் கருதுகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசாருக்கு எப்.பி.ஐ. அதிகாரிகளும் உதவி வருகின்றனர்.