அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வம்.. பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்யும் - இஷாக் தார்!

 

உலகையே அச்சுறுத்தி வரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கைத் தணிக்க, பாகிஸ்தான் எடுத்து வரும் ரகசிய மற்றும் நேரடி முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் தார், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் பின்னணியில் உள்ள முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தன. இந்தப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிப் முனீர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் இறுக்கமான சூழலைத் தணிக்கப் பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்யும். இரு நாடுகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்தை முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை" என இஷாக் தார் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு, வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவது சர்வதேச அரசியல் அரங்கில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவே இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பாகிஸ்தான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.