கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்த கார்... பெரும் பரபரப்பு!

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்துகள் தொடர்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த வழியாக 6 பேர் பயணம் செய்த கார் ஒன்று சென்றபோது, எதிர்பாராதவிதமாக கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதே பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புத் தடுப்புகள், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.