900 பேருக்கு விருந்து... உயிருடன் இருக்கும்போதே தனக்குத் தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது தாத்தா!
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், தனது மறைவுக்குப் பிறகு ஒரே மகளுக்கு இறுதிச் சடங்குகளால் சுமை ஏற்படக் கூடாது என்பதற்காக, 80 வயது முதியவர் ஒருவர் உயிருடன் இருக்கும்போதே தனக்கான 13-ம் நாள் காரியத்தை நடத்தி விருந்து அளித்துள்ளார்.
ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த சவுத்ரி பல்ஜோர் சிங்கிற்கு ஆண் வாரிசு இல்லை. பிங்கி என்ற ஒரே மகள் உள்ளார். தனது மறைவுக்குப் பிறகு மகள் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 15-ம் தேதி பாரம்பரிய முறைப்படி யாகம் நடத்தி, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 900 பேருக்கு விருந்து அளித்துள்ளார். இதற்காக 8 சமையல்காரர்கள் உணவு தயாரித்துள்ளனர்.
மேலும், தனது 10 வயது பேரன் முகுலுக்குத் தலைப்பாகை அணிவித்து குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். தனக்குச் சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தையும் பேரன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். தந்தையின் முடிவால் மகிழ்ச்சியடைவதாக அவரது மகள் பிங்கி தெரிவித்துள்ளார்.