பத்ரிநாத்தில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
'ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன்' நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர், பத்ரிநாத்தில் இருந்து ஃபாட்டா நோக்கிச் சென்றபோது, ஜோஷிமத் அருகே சாய் கிராமப் பகுதியில் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டரில் ஒரு விமானி மற்றும் 5 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் தொடர்பை இழந்ததைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தகவல் வெளியிட்டு, மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பு வெளியாகாத நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.