15 வயதில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி... டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!

 

 

இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயதிலேயே புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026-27 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார். இந்தூரில் நடைபெற்ற முதல் போட்டியில் சவுராஷ்டிரா அணியை பீகார் எதிர்கொண்டது. அப்போது அவருக்கு 15 வயது 232 நாட்கள் மட்டுமே.

இதற்கு முன்பு குரோஷியாவைச் சேர்ந்த சாக் வுகுசிக், 17 வயது 311 நாட்களில் டி20 போட்டியில் அணிக்கு கேப்டனாக செயல்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் பேட்டிங்கில் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த வைபவ் ஆட்டமிழந்தார். முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 137 ரன்கள் எடுத்தது. இலக்கை எட்டிய சவுராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் பீகார் அணியின் முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே வைபவ் கேப்டனாக செயல்பட உள்ளார். அதன்பிறகு நவம்பர் 19-ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாட உள்ளார்.