வைகாசி விசாக பிரம்மோற்சவம்.. வடபழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்!
புகழ்பெற்ற சென்னை வடபழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (வியாழக்கிழமை, மே 21) காலை 7.35 மணிக்கு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில், தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. சூரிய பிரபை, சந்திர பிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
மே 27ம் தேதி காலை 7.05 மணி முதல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் (தேரோட்டம்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. மே 30ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேல்: தீர்த்தவாரி கலசாபிஷேகம். மாலை 7 மணிக்கு: திருக்கல்யாண உற்சவம். அன்றைய இரவு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும்.
மே 31 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.