விஜய்யின் பண்பாடு வியக்க வைத்தது... வைகோ நெகிழ்ச்சி !
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று (மே 11) அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு விஜய் வருகை தந்தார். அவரை வைகோவின் மகன் துரை வைகோ வாசலுக்கே வந்து இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வைகோ அவர்கள் முதலமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தித் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் விஜய்யின் நற்பண்புகள் தன்னை மிகவும் வியக்க வைத்ததாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். "உங்கள் பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்" என்று விஜய் தன்னிடம் கூறியதை வைகோ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் முடிவில், முதலமைச்சர் விஜய் புறப்படும் வரை வைகோ நேரில் வந்து கார் வரை நின்று அவரை வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பேசிய வைகோ, "தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான அடையாளம் தான் இந்தத் தேர்தல் முடிவு" என்று குறிப்பிட்டார். மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறினார். இளைய தலைமுறைத் தலைவர் ஒருவர் மூத்த தலைவர்களின் அனுபவங்களுக்கு மதிப்பு அளிப்பது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.