செஸ் அரங்கில் வரலாற்று சாதனை...கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்று வைஷாலி மகுடம்!

 

 

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான உலக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 24 வயது இளம் வீராங்கனை ஆர்.வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியில் இறுதிச் சுற்று வரை விறுவிறுப்பாக விளையாடிய அவர், ரஷ்ய நாட்டின் கிராண்ட்மாஸ்டரான கத்ரினா லக்னோவை வீழ்த்தி 14 சுற்றுகளின் முடிவில் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்த்து விளையாடும் தகுதியைப் பெற்று, உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வைஷாலி முன்னேறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் அவர் சீனாவுடன் நேரடியாக மோத உள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள வைஷாலியின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.