4 வயதில் 10 கி.மீ மாரத்தான்! வள்ளியூரில் அசத்திய கன்னியாகுமரி சிறுமி - குவியும் பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற 10 கி.மீ. மாரத்தான் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி முழு தூரத்தையும் ஓடி சாதனை படைத்துள்ளார்.உலக இதய தினத்தையொட்டி வள்ளியூரில் தனியார் மருத்துவமனை சார்பில் 10 கி.மீ. தூரத்துக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த ஜெகதீஷின் மகள் ரிபசின் வர்சா (4) ஆர்வத்துடன் பங்கேற்றார். சக போட்டியாளர்களுடன் இணைந்து ஓடிய சிறுமி, சோர்வின்றி 10 கி.மீ. தூரத்தையும் முழுமையாக கடந்து இலக்கை எட்டினார்.
சிறுமி முழு 10 கி.மீ. தூரத்தையும் கடந்து சென்றது அங்கு இருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது ஓட்டத்தை பார்த்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியதுடன், சிறுமிக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பொதுவாக நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் வயது மற்றும் போட்டி வகைக்கு ஏற்ப வெவ்வேறு தூரங்கள் நிர்ணயிக்கப்படும் நிலையில், வள்ளியூரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் 10 கி.மீ. தூரமாக நடத்தப்பட்டது.
இதில் வெறும் 4 வயதிலேயே ரிபசின் வர்சா 10 கி.மீ. தூரத்தை முழுமையாக ஓடி கடந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறுமியின் இந்த முயற்சிக்கு அவரது குடும்பத்தினரும், போட்டியை ஏற்பாடு செய்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உலக இதய தினத்தை முன்னிட்டு உடற்பயிற்சி மற்றும் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி, சிறுமி ரிபசின் வர்சாவின் பங்கேற்பால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.