டெம்போ மீது வேன் மோதி கோர விபத்து; 4 பேர் பலி - பீகாரில் கொடூரம்!

 

பீகார் மாநிலத்தில் நேற்று மதியம் நேர்ந்த பயங்கர சாலை விபத்தில், டெம்போ மீது வேன் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விபத்து குறித்த முதற்கட்ட விபரங்களின்படி, பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று மதியம் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் தங்களது சொந்த ஊருக்கு ஒரு டெம்போ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் சுகாலி பகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் எதிரே வந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது நேருக்குநேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கொடூர விபத்தின் தாக்கத்தால் டெம்போ பலத்த சேதமடைந்ததில், அதில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல் துறையினர், பொதுமக்களின் உதவியோடு படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊர் திரும்பிய போது நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.