வானதி சீனிவாசன் டிஸ்சார்ஜ் - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு இன்று முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளார்.தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த வானதி சீனிவாசனுக்கு, கடந்த வாரம் காலில் திடீரென தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் (KMCH) அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஒரு வாரம் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது கட்சியினரிடையே சிறு கவலையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், அவர் இல்லாத நேரத்திலும் அவரது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்கள் கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இன்று அவர் வீடு திரும்பியுள்ள நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் அவர் மீண்டும் தனது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.