வண்டலூர் குடியிருப்புக்குள் நுழைந்த 20 அடி மலைப்பாம்பு… !
சென்னை வண்டலூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட முயற்சிக்குப் பிறகு மலைப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர்.
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலை அருகே பழைய ஓட்டேரி பகுதியில் வேம்புலி அம்மன் கோவில் தெரு அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும், அதைச் சுற்றியுள்ள காப்புக்காட்டுப் பகுதியும் உள்ளன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் காப்புக்காட்டுப் பகுதியில் இருந்து சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் ஊர்ந்து வந்துள்ளது. தெருவில் பிரம்மாண்டமான பாம்பு செல்வதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து தாம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மலைப்பாம்பைப் பிடித்தனர். பின்னர் அதைத் தாம்பரம் வனச்சரக அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.தொடர்ந்து, பாதுகாப்பான அடர்ந்த காப்புக்காட்டுப் பகுதியில் மலைப்பாம்பு விடுவிக்கப்பட்டது. வனத்துறையினரின் விரைவான நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்