வண்டலூர் மேம்பால சாலை விபத்தில் 6 வயது சிறுவன் பலி; தந்தை, சகோதரி படுகாயம்!

 

 

சென்னை வண்டலூர் - பெருங்களத்தூர் மேம்பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் தந்தை மற்றும் சகோதரியுடன் சிறுவன் மிளிரன் பயணம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மேம்பாலத்தில் எதிர்த்திசையில் வந்த வேனும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த சிறுவன் மிளிரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மேலும், சிறுவனின் தந்தை சரவணன் மற்றும் சகோதரி டிசானா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் எதிர்த்திசையில் வாகனம் வந்தது எப்படி, விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.