வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி... பயணியின் உணவில் கிடந்த பசை டப்பா !
மைசூரிலிருந்து சென்னை நோக்கி வந்த அதிவேக வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பசை டப்பா கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகர் என்பவர் சமீபத்தில் மைசூரிலிருந்து வந்தே பாரத் ரயிலில் சென்னைக்குத் திரும்பிப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு தட்டில் ஒட்டும் தன்மையுள்ள ஜெல் பாக்கெட் ஒன்று கிடந்ததைக் கண்டு அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். ரயில்வே உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். மேலும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகாரை ரயிலின் உணவு மேலாளரிடமும் அவர் முறைப்படி அளித்துள்ளார். உணவு ஒப்பந்ததாரரின் இந்த மோசமான அலட்சியச் செயல் பயணிகளுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் தனது புகாரில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில்வே உணவக ஊழியர்களின் இத்தகைய கவனக்குறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.புகார் பெறப்பட்டதனைத் தொடர்ந்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகப் பிரிவு அலுவலர் பயணியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பையும் உணவின் தரத்தையும் உறுதி செய்யக் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.