திக் திக் நிமிடங்கள்... தடம் புரண்ட வந்தே பாரத் ரயில்...  நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

 

மும்பையில் இருந்து சோலாப்பூர் நோக்கிச் சென்ற வந்தே பாரத் அதிவேக ரயில் நேற்று இரவு புனே அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாள இணைப்பான டைமண்ட் கிராசிங் பகுதியில் சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. ரயில் அந்த நேரத்தில் மிகவும் மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த ரயில் சேவை வரலாற்றில் முதல்முறையாக இப்போதுதான் பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவேக ரயில்கள் இத்தகைய விபத்துகளில் சிக்குவது பயணிகளிடையே மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தண்டவாள பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் பெருமையாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயிலில் இத்தகைய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.